வியாழன், 23 பிப்ரவரி, 2017

முருகனை பின்தொடர்ந்து வந்த சிவசக்தியில் சிவன் எங்கே ??

தென்னாடுடைய சிவனே போற்றி!!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!




எல்லோருக்கும் தெரிந்த கதை, ஞானப்பழத்துக்காக முருகன் தன் குடும்பத்திடம் சண்டை போட்டுக்கொண்டு பழனி மலையில் வந்து அமர்ந்தது. அதன் பிறகு சண்முகனை சமாதானப்படுத்த சிவனும் சக்தியும் அவரைப் பின்தொடர்ந்து வந்தனர். 

பழனியில் பாய்ந்தோடும் சண்முகநதிக்கரையில் இறங்கினர். அங்கே இருந்த இயற்க்கை வனப்பைக்கண்ட சிவனும் சக்தியும் தங்களை மறந்து இயற்க்கையின் எழிலை ரசித்தவன்னம் இருந்தனர். அப்போது சக்திக்கு திடீரென்று நாம் எதற்கு வந்தோம் என்ற  நினைவு வந்தது. முருகன் கோபமாக வந்தானே அவனைத்தேடி செல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. 

சிவனை அழைத்தபோது, இயற்க்கையின் அழகை ரசித்துக்கொண்டிருந்த அவர் மனம் அதிலிருந்து விளக்க மறுத்தது. எனவே சக்தி மட்டும் முருகனை தேடிச்செல்ல ஆயத்தமானார்.
அப்போது சிவனை விட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றார் அன்னை. பிறகு முருகனை சமாதானப்படுத்த தன சக்தியை ஒன்றாக திரட்டி வேலை முருகனுக்கு அளித்தார்.

இப்பொழுதும் பழனியில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. பழனிக்கு வெளியில் பெரியாவுடையார் கோவில் உள்ளது. இதன் பெயர் காரணம், சிவன் சக்தியை பிரிய மனமில்லாது விடைகொடுத்ததால், பிரியாவிடையார் என்றும். பிரிந்து சென்றாலும் சிவனை ஒரு பாகமாக கொண்டு என்றும் பிரியாத அன்னை, பிரியாநாயகி என்றும் அழைக்கப்பட்டனர்.



நாளடைவில் இது மருவி பெரியாவுடையார் என்றும் பெரியநாயகி என்றானது.

பெரியாவுடையார் கோவிலின் சிறப்புகள் :

* இக்கோவில் சண்முக நதிக்கரையோரம் அமைந்துள்ளது 
* சிவலிங்கம் மேற்குபார்த்து (சண்முக நதியை பார்த்து ) அமைந்தது சிறப்பு 
* இந்த கோவிலில் சக்தி தேவியின் எந்த சொரூபமும் இல்லை சிவன் மட்டும் தனியாக உள்ளார் 


இத்தகைய சிறப்பு மிக்க ஆலயம் பழனியிலிருந்து 4 கீ.மீ  தூரத்தில் உள்ள மானூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

அடுத்த பதிவில் சிந்திப்போம்!!

ஓம் நம சிவாய!!!




சனி, 18 பிப்ரவரி, 2017

'இட் இஸ் எ மெடிக்கல் மிராக்கிள்' - சுக்கிரனின் விசேஷமான சக்தி என்னது?

தென்னாடுடைய சிவனே போற்றி !!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!



கோடி ரூபாய்க்கு பங்களா, லட்ச ரூபாய்க்கு கார், அழகான மனைவி குழந்தைகள் இப்படி வாழ்க்கையை அனுபவிக்கரவன பாத்தா முதல்ல நம்ம நாக்குல வர்ற வாக்கு "அவனுக்கென்னப்பா சுக்கிரன் உச்சத்துல இருக்கான்".




ஒன்பது கிரகங்களில் சுக்கிரனுக்கு மட்டும் அப்படி என்ன வெயிட்டேஜ்??

சுக்கிராச்சாரியார் அசுரகுருவாவார். அப்படின்னா  அவர் தீய கிரகமா? - இல்லை .

அனால் அவர் அசுரர்களின் குருவாக மட்டும் இருந்தார்.

அவர் பிருகு முனிவரின் மகன். முதலில் அவர் தந்தையை குருவாக ஏற்றார். பின்னர் பிரகஸ்பதி குரு பகவானிடம் சீடனாக இருந்தார்.

வித்தை பல கற்றும் திருப்தி அடையாத சுக்கிராச்சாரியார், சிவனை நோக்கி தவம் இருந்து பரமேஸ்வரனையே குருவாகப்பெற்றார். இவரின் குருபக்தியில் மகிழ்ந்த சிவபெருமான், யாரும் கற்றிடாத அம்ருத சஞ்சீவினி மந்திரத்தை சுக்கிராச்சாரியாருக்கு உபதேசித்தார்.

தேவர்களிடம் அமிர்தம் உள்ளது. ஆனால் அசுரர்களிடம் அவர்கள் குலத்தை காப்பதற்கு அமிர்தத்திற்கு நிகரான எந்த ஆயுதமும் இல்லை. அனைத்து உயிர்களையும் சமமாக பாவிக்கும் பரமேஸ்வரன், அசுரர் குலத்தை காக்க அமிர்த சஞ்சீவினி மந்திரம் அறிந்த சுக்கிராச்சாரியாரை அசுர குருவாக பதவியேற்கும்படி கேட்டார்.

தன் குருவின் விருப்பப்படி அசுரகுருவாகினார் சுக்கிராச்சாரி. ஒவ்வொருமுறை தேவாசுர யுத்தம் நடந்த போதும் மாண்ட அசுரர்களை சிவன் அருளால் தன் சஞ்சீவினி சக்தியை கொண்டு மீண்டும் உயிர் பெறச்செய்தார்.

அனால் இவருக்கு எவ்வாறு கிரக பதவி கிடைத்தது??

சிவனின் குரோத சக்தியில் இருந்து தோன்றியவன் ஜலந்தரன். இந்த ஜலாசுரன் பார்க்க சிவனின் உருவத்தை ஒத்திருந்தான். அவன் அறவழியை மீறி அராஜகம் செய்தான் சிவனின் சக்தி என்பதால் தேவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. சுக்கிராச்சாரியார் தன் குருவான சிவனின் உருவத்தில் இருக்கும் ஜலாசுரனை கண்டிக்க முடியாமல் அசுரர்களிடம் இருந்து பிரிந்து சென்றார்.

சுக்கிராச்சாரியாரின் பெருந்தன்மையை பார்த்த சிவபெருமான், ஜலந்தரனின் வதம் முடிந்ததும் அவரது பதவியான அசுரகுரு பதவியையும் கூடவே நவகிரகங்களில் ஒருவராக கிரக பதவியையும் சுக்கிரனுக்கு சிவன் அளித்தார்.

சுக்கிரனின் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தின் சிறப்பால் தான், ஜாதகத்தில் சுக்கிரன் ஆயுள் ஸ்தானமான 8ம் ஆதிபத்யம் பெற்று பலமாக இருந்தாலும் , 8ம் இடத்தில் கெடாமல் பலமாக இருந்தாலும், மற்ற கிரகங்காளல் மரணம் பெறும் நிலை ஏற்பட்டாலும் ஜாதகன் அதிலிருந்து மீண்டு வருவான். இதை நடைமுறையிலும் கண்கூடாக பார்க்க முடியும்

டாக்டர்கள் சொல்லும் "இட் இஸ்  எ  மெடிக்கல் மிராக்கிள் (It is a medical miracle)"
அதற்க்கு சொந்தமான அமைப்பு இதுதான்...

அடுத்த பதிவில் சந்திப்போம்..


இந்த பக்கத்தில் வெளிவரும் பதிவுகள் பிடித்திருந்தால் "Follow" செய்யவும் .

ஓம் நம சிவாய!!!





வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

சண்டிகேஸ்வரருக்கு எதற்கு கை தட்டுகிறார்கள் - உண்மை காரணம் என்ன


தென்னாடுடைய சிவனே போற்றி !!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!


பொதுவாக சிவாலயங்களில் மூலவரை வலம் வரும்போது இடப்பக்கத்தில் ஒரு சிலை சிவனை நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கும். பலர் அங்க போய்  கைதட்டிட்டு வருவாங்க. எதுக்கு சார் அந்த சாமி முன்னாடி கை  தட்டறிங்கன்னு கேட்டா "அவர் தியானத்துல இருப்பர். நான் வேண்டிக்கறது அவருக்கு கேக்கணும்ல அதான் அவரை கை தட்டி எழுப்பறோம்" னு சொல்லறாங்க.

இன்னும் சிலர் "அது செவிட்டு சாமி அதான் கை  தட்டுறோம்"னு  சொல்லறாங்க. மூனாவது ரகம்  எதுக்கு தட்றோம்னே  தெரியாது ஆனா தட்டிட்டு போவாங்க.



சரி யார் தாங்க அவரு!!!

அவரு எதுக்கு அங்க உக்காந்திருக்கிறார் !!! வேற இடமே இல்லையா!!!

இந்த கை தட்டுற பழக்கம் எப்படி வந்துச்சு ?

இன்னும் சிலர் அவங்க போட்டிருக்க துணில இருந்து ஒரு நூலை உருவி சாமி மேல போடுவாங்க. அது எதுக்கு?

விஷயம் என்னனு சாய் சரவணன் சொல்றன் கேட்டுக்கோங்க !! :)

அவர் பேரு "சண்டிகேஸ்வரர்". ஈஸ்வர பட்டம் பெற்றவர். அதுக்கு எந்த காலேஜ்ல படிக்கணும்னு யோசிக்கறவங்கள்லாம் அப்படியே இந்த பேஜ்ஜ  கிளோஸ் பண்ணிருங்க.

ஈஸ்வர பட்டம் வாங்கறது சாதாரண விஷயம் இல்ல. அவங்க தலை சிறந்த சிவபக்தர்கள். அவங்க பக்திக்கு ஈடு குடுக்க முடியாது. அதுனால தானோ என்னவோ ஈஸ்வரன் அவரையே குடுத்துட்டாரு போல.

குறிப்பு: ஈஸ்வர பட்டம் பெற்ற மற்றும் சிலர் சனீஸ்வரன், ராவணேஸ்வரன் , நந்தீஸ்வரர். இவங்க சிவ பக்தியை பத்தி நான் சொல்லனும்னு இல்ல.

சண்டிகேஸ்வரர் சிவன் முன்னாடி உக்காந்து தியானம் பண்ணிட்டு இருக்கும்போது குறுக்க போனதுக்காக பெத்தவங்களையே வெட்டினார்னு சொல்றாங்க. அது நால தான் அவரை இடப்பக்கமாக வணங்கிட்டு இடப்பக்கமாவே திரும்பி வரணும். அவருக்கும் சிவனுக்கும் நடுவுல போக கூடாது.

சரி எதுக்கு அவர் அங்க உக்காந்துருக்கார்? நல்லா நோட் பன்னனிங்கன்னா தெரியும், சிவனுக்கு படைக்கற அபிஷேக பொருள்கள் லிங்கத்திருமேனி மேல பட்டு வெளில வர்ற இடத்துல தான் சண்டிகேஸ்வரர் இருப்பார். சிவனுக்கு படைக்கும் அணைத்து பொருள்களும் சிவனுக்கு பின் முதலாக ஈஸ்வர பட்டம் பெற்ற சண்டிகேஸ்வரரையே சேரும். அதனால் தான் அவர் அங்கு அமர்ந்திருக்கிறார்.

அபிஷேக பொருள்கள் சரி, சிவன் உடுத்தும் வஸ்திரம் அது என்னாகும். அதையும் சண்டிகேசுவரர் கிட்ட வைக்கறது தான் முறை. அப்படிதான் வச்சுட்டிருந்தாங்க. இந்த வழக்கம் தான் நாளடைவுல நூல் போடுற பழக்கமாயிருச்சு.

சிவன் கோவில்ல குடுக்கற திருநீறு, பூ , பழம் எதுவா இருந்தாலும் சண்டிகேஸ்வரர் முன்னாடி வச்சு பெர்மிஸ்சன்  வாங்கிட்டு தான் வீட்டுக்கு எடுத்துட்டு வரனும்.

அடுத்து கை  தட்றது. நம்ம எந்த பிரசாதமும் கோவில்ல இருந்து எடுத்துட்டு போகலைன்னா  அதையும் அவர்கிட்ட சொல்லனும். அதுக்கு தான் நம்ம கையை அவர்முன்னாடி தட்டி காமிக்கறோம். ஆனா அப்படி தட்டக்கூடாது.
இரண்டு கையையும் சேர்த்து தேய்த்தால் போதும்.

சண்டிகேசுவரரிடம் வேண்டுவதில் சிறப்பு என்னவென்றால் நாம் சென்ற பின்பு சிவனிடம் நம் வேண்டுதலை சொல்வாராம். அதனால் சிவனிடம் வேண்டுவதை சண்டிகேஸ்வரர் காதிலும் போட்டு வைப்பது நல்லது.


அடுத்த பதிவில் சந்திப்போம் !!! நன்றி!!!

ஓம் நம சிவாய!!!










செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

திருமண தடை நீக்கும் அர்ச்சுனேஸ்வரர் ஆலய சிறப்பு

தென்னாடுடைய சிவனே போற்றி !!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!


                  பொதுவாக பழங்காலத்து  சிவாலயம் என்றாலே ஊரை விட்டு வெளியே அல்லது ஆத்தங்கரை ஓரமாக தான் அமைந்திருக்கும். அதுபோலவே அமராவதி ஆத்தங்கரையோரம் ஊருக்கு வெளியில் தான் அமைந்திருக்கிறது இந்த அர்ச்சுனேஸ்வரர் ஆலயம்.

திருப்பூர் மாவட்டம் :

                 இந்த கோவில், மடத்துக்குளம் (பழனியிலிருந்து கோவை செல்லும் NH 209 சாலை)  என்னும் ஊரில் இருந்து 6 கி.மீ  தூரத்தில் உள்ள கடத்தூர் என்னும் கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ளது. அமராவதி ஆற்றின் எழில்மிகு இயற்கை தோற்றத்தின் நடுவே வயல்வெளிகளால் சூழப்பட்டு பரமேஸ்வரன் அர்ச்சுனேஸ்வரராய் காட்சி தருகிறார். 

கோவில் அமைப்பு:

            இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சிவாலய அமைப்பாக கிழக்கே ஒரு வாயிற்கோபுரமும், தெற்கே ஒரு வாயிலும் உள்ளது. கோவிலின் உள்ளே மிக அரிதாக காணக்கூடிய அமைப்பான சிவனுக்கு வலமாக  சன்னதி அமைந்துள்ளது. சிவன் தேவியை தன்னோடு ஏற்றது இடப்பாகத்தில்தான். ஆனால் இங்கு  வலப்பக்கத்தில் அம்மன் சன்னதி அமைந்திருப்பது சிறப்பு.




         கிழக்கு வாசலில் நுழைந்தவுடன் நந்தீஸ்வரர் சிவனை நோக்கி அமர்ந்திருப்பர். அவைரை கடந்து தான் சிவனை காண முடியுமல்லவா. மூலவர் சன்னதியின் தெற்கே தட்சிணாமூர்த்தி பளிங்கு சிலையாக காட்சியளிக்கிறார். சன்னதியின் வலப்பக்கத்தின் பின்னே கிழக்கு நோக்கிய வலம்புரி விநாயகர் அமைந்திருப்பது சிறப்பு. அவரை வணங்கி   நகர்ந்தால், மூலவர் சன்னதிக்கு பின்னல் ஸ்ரீ மகா விஷ்ணு சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

         சன்னதியின் இடப்பக்கத்தின் பின்னே கிழக்கு நோக்கிய சுப்ரமணியர் சன்னதி உள்ளது. ப்ரம்மதேவருக்கு சிலை இல்லை கோபுரத்திலேயே அமைந்துள்ளார். சண்டிகேசுவரர் சிவனை நோக்கி அமர்ந்துள்ளார்.  வடக்கு பார்த்தபடி துர்க்கை சன்னதியும் அமைந்துள்ளது.  

நவகிரகங்கள் அனைத்தும்  இல்லை அனால் சனீஸ்வரர் மட்டும் தனியாக அமர்ந்துள்ளார்.
காலபைரவர் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

            கோமதி அம்மனாக காட்சி அளிக்கும் அம்பாள் சன்னதி முன்பு சுமார் 8 அடி  அளவிலான புற்று உள்ளது.  இந்த புற்று ஆயிரம் ஆண்டுகளாக  வளர்ந்து வருவதாக கல்வெட்டுகள் சொல்கின்றன.




          சிவபெருமான் இங்கு லிங்க  வடிவில் காட்சிதருகிறார். மேலும் சிறப்பாக சுயம்பு மூர்த்தியாக அமைந்துள்ளது. இந்த லிங்கத்திருமேனியின் சிறப்பு, இதன் வளரும் இயல்பு தான் . ஆம் இங்கு உள்ள லிங்கமானது மெதுவாக உயரே வளர்ந்து கொண்டிருக்கிறது.

தல விருட்சமாக மருதமரம் உள்ளது. மூலவருக்கு மருதீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. கோவிலுக்கு உள்ளே வில்வ மரமும் காணலாம் 

சிறப்பு:

புரட்டாசி - ஐப்பசி மாதங்களின் சூரிய உதயம்  எதிரே உள்ள அமராவதி ஆற்று நீரில் பட்டு நேர்கோடாக கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மேல் விழுவது மிகவும் சிறப்பு . 

இக்கோவில் "தென்திருமணஞ்சேரி" என்றும் அழைக்கப்படுகிறது. நீண்ட நாள் திருமணமாகாதவர்கள், சர்ப்ப தோஷங்களால் திருமணம் தாமதம் ஆகும் நபர்களுக்கு இங்கு ஞாயிறு திங்கள் கிழமைகளில் பரிகாரம் செய்யப்படுகிறது. பரிகாரம் செய்த விரைவில் திருமணம் நிச்சயமாவதை பலர் தங்கள் கைப்பட கடிதம் எழுதி  அனுப்புகிறார்கள். இன்றும் அதில் சில பக்தர்கள் பார்வைக்காக கட்சி பலகையில் வைக்கப்பட்டிருக்கிறது .


இவ்வளவு சிறப்பு மிக்க ஆலயத்தால் ஈர்க்கப்பட்ட பக்தர்களில் நானும் ஒருவன் !!! 



ஓம் நம சிவாய 

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

நான் வைகுண்டம் போவேனா ??

வணக்கம்........

ஒருமுறை  வியாசர் அவரோட சீடர் 'கனகதாசன்' கிட்ட ஒரு கேள்வி கேட்டார்.

"கனக தாசா...!! நம்முள் யார் வைகுண்டம் போவார்கள் ??" என கேட்டார் . கனக தாசர் பதில் கூறவில்லை. பின் ஒவ்வொரு சீடனாக கை காட்டி "இவன் வைகுண்டம் போவானா?" எனக்கேட்டார். அனைவருக்கும்  கனகதாசன் "இல்லை" என பதிலளித்தார் .

பின் வியாசர் "நான் வைகுண்டம் போவேனா?" என கேட்டார். அதற்கும் கனக தாசர் "இல்லை" என கூறினார் .

சீடர்கள் அனைவரும் கனக தாசன் மீது ஆத்திரம் கொண்டனர். அனால் வியாசர் பொறுமையாய், "சரி , நீ வைகுண்டம் போவாயா?" எனக்கேட்டார் .

அதற்க்கு கனக தாசன் "நான் போனால் போவேன் " என்று பதிலளித்தார். இதைக்கேட்ட சீடர்களின் கோபம் அதிகமாயிற்று . ஒரு சீடன் எழுந்து "கனக தாசா  குருவிடம் நீ பேசும் வார்த்தை தகாதவை " என்று கண்டித்தான் .


வியாசர் அவனை அமர்த்தி விட்டு பொறுமையாய் " கனக தாசா எவ்வாறு கூறுகிறாய்?" என கேட்டார்.   

அதற்க்கு கனகதாசன் "குருவே, நான் அளித்த பதில், "நான் " என்னும் அகந்தை என்னை விட்டு போனால் நான் வைகுண்டம் போவேன்" என்று கூறினார்.  

அப்போது தான் சீடர்களுக்கு விளங்கியது . 


எனவே "நான்" என்னும் அகந்தையை விட்டு இறைவனடி சேரும் வழியை தேட வேண்டும்...   

சனி, 29 ஆகஸ்ட், 2015

சனியின் முடமான கால்களை திரும்ப தந்த திருவாதவூர் வேதநாதன்!!

தென்னாடுடைய சிவனே போற்றி !!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!




சனியால் அவதிப்படுவோர்  (including myself) சனியின் அருள் பெற வேண்டிய திருத்தலம் ஒன்று உள்ளது. அது எம் மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர் வேதநாதன் திருத்த்தலம் தான்.

சனிக்கும் திருவாதவுருக்கும் உள்ள தொடர்பு என்ன ??


சனிபகவானே அங்கு வந்து வழிபட்ட தலம்... அது என்ன கதைன்னு பாக்கலாம்.

மாண்டல்ய முனிவர் ஒரு சிறந்த தவ யோகி. அவரு ஒரு முறை ஒரு நாட்டின் வெளியில் உள்ள ஒரு காட்டில் தவத்தை தொடங்கினார். பல ஆண்டுகள் தவத்திலேயே அழ்ந்து  விட்டார். அப்போ தான் நம்ம ஆளு சனீஸ்வரர் முனிவர் ஜாதகப்படி ஏழரை சனிக்காலத்தில் சஞ்சரிக்கிறார்.

'சும்மா இருந்தா சனியன் புடிக்கும்' அப்டிங்கறத மக்கள்  தப்பா புரிஞ்சிக்கறாங்க. சும்மா இருக்கறதுனால சனி பிடிக்கும்னு  அர்த்தம் இல்ல. நம்ம எந்த வேலையும் செய்யமா "சும்மா இருந்தாலும்" சனி பிடிப்பார்

சரி, கதைக்கு போகலாம்...

அதே சமயம் அந்நாட்டு அரசரின் கஜானாவில் ஒருநாள் திருடர்கள் நுழைந்தனர். இருப்பதெல்லாம் சுருட்டிக்கொண்டு குதிரையில் தப்பினர். செல்லும் வழியில் திருடிய ஆபரணங்கள் சிதறின. ஒரு இடத்தில் நின்று மூட்டையை நன்றாக கட்டி சென்றனர்.

விடிந்தது..... கஜானா காலியாக இருப்பதை பார்த்த அரசர், தளபதியை அழைத்து "திருடன் எங்கு இருந்தாலும் அவனை ஊர் அறிய  கொன்றுவிட்டு நகைகளை திரும்ப கொணருங்கள்" என்று கட்டளையட்டார் .

சிதறிய நகைகளை பின்தொடர்ந்து சென்ற தளபதியும் படையும் ஒரு இடத்தில்  நின்றனர். "இதற்கு மேல் நகைகள் இல்லை, திருடன் இங்கே தான் இருப்பான் " என்று தேடினர் .

அங்கே தவம் செய்துகொண்டிருந்த மாண்டல்ய முனிவரின் கழுத்தில் அரசரின் இரத்தின மாலை கிடந்தது . 'கிழே விழ வேண்டிய மாலை சனியின் பார்வையால் முனிவரின் கழுத்தில் விழுந்தது'.

அதை பார்த்த தளபதி முனிவனாக வேடமிட்டு தப்ப திருடன் நடிக்கிறான் என்று எண்ணி முனிவரின் தவத்தை கலைக்க முற்பட்டான். அவரை மரண மேடையில் ஏற்றினான். கத்தி கழுத்தில் பட்டதும் முனிவர் கோபத்தோடு கண் விழித்தார். எதிரில் இருக்கும் கழுமேடை எரிந்து சாம்பலாகியது.

தளபதி தன் தவறை உணர்ந்து காலில் விழுந்து முனிவரின் மேல் இருந்த நகை காரணமாகவே சந்தேகப்பட்டு தவறு செய்தேன் என  மன்னிப்பு கேட்டார்.

முனிவர் தன ஞான திருஷ்டியில் கண்டதில்  சனிபகவான் தான் காரணம் என அறிந்தார். 'அடே  சனியனே ' என்றவுடன் சனி முனிவர் முன் தோன்றினார். "பல காலம் செய்த என் தவத்தை உன் கோர பார்வையால் நாசமக்கிவிட்டாயே உன் கால்கள் முடமாகி கடவது" என சபித்தார்.

உடனே  சனிபகவான் கால்கள் முடமாகி கீழே விழுந்தார். தன்  மகன் துயர் கண்டு சூரியன் தன்  மகனை தாங்கி பிடிக்கிறார். "முனிவரே என் மகன் என்ன பிழை செய்தான் அவன் நீதியை காப்பவன், ஈஸ்வர பட்டம் பெற்றவன். அவன் தன் கடமையை செய்ததற்கு அவனுக்கு இப்பெரும் தண்டனையா" என்றவாறு கேட்க...

முனிவர், "உன் மகன் செய்தது நியாமா ?? பல காலம் செய்த தவத்தை கெடுத்துவிட்டானே" என்றார்.அதற்கு சூரியன்  "அது உங்கள் முன்வினைப்பயன் .பாரபட்சம் பாக்ககூடாது என்பதால் தான் என் மகன் கண்ணில் கருப்பு துணி  அணிந்திருக்கிறான் . அவனுக்கு நீதியில் நீங்களும் ஒன்றுதான், சிவனும் ஒன்றுதான், சாதாரண மனிதரும் ஒன்றுதான், இவன் இல்லாமல் நவக்கிரக சஞ்சாரம் எவ்வாறு நடக்கும்"  என்றார்.

முனிவர் தான் கோபத்தில் அவசரப்பட்டதை உணர்ந்தார். சாப விமோச்சனம் கிடைக்க வேதங்களின் நாயகனான சிவபெருமானை திருவாதவூரில் தரிசிக்க சொன்னார்.

உடனே சூரியன் தன்  மகனை தூக்கிக்கொண்டு வாதவூர் வந்தார். அங்கு சனிஸ்வரர் ஈசனை என்னி  தவம் இருந்தார். மறைநாதன் சனிக்கு காட்சி தந்து அவரின் முடத்தை போக்கினார். மேலும்  "சனீச்வரா..... நீ வந்து தவம் இருந்து வழிபட்ட இந்த தலத்தில் உனக்கும் ஒரு இடம் தருகிறேன். உன் கிரக சஞ்சார பலனால்  அவதிப்படுவோர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் அவர்களை நீ சோதிக்க கூடாது" என்று கூறி சனிக்கு தனி சன்னதி தந்தார் .


ஏழரை சனி, கண்ட  சனி, அஷ்டமச்சனி இருக்கறவங்க எல்லாரும் திருவாதவூருக்கு போய்  வேதநாதனை வணங்கி அவன் அருள் பெற வாழ்த்துக்கள்

நானும் அவனைக்கான கிளம்பிக்கொண்டிருக்கிறேன்....... :)


ஓம்  நம சிவாய !!!
  

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

வரலட்சுமி விரதம் இன்று

இன்று வரலட்சுமி  விரதமும் திருவோண விரதமும் ஒரே நாளில் ..........




அம்மா வரலக்ஷ்மி விரதத்துக்கு போயிருக்காங்க.......


வரலக்ஷ்மி விரதம் ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில் அனுஷ்டிப்பார்கள். திருவோண விரதம் ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர  நாளில் அனுஷ்டிப்பார்கள்.

இந்த இருவிரதமும் உடல் மற்றும் மன தூய்மையை அடிப்படையாய் கொண்டு இருக்கும் விரதங்கள்.

பத்ரச்ரவன் என்ற மன்னனின் மனைவி கசந்திரிகா. இவள் மிகவும் தெய்வீகமான தூய்மை உடையவள். தன்னையும் தன் இருப்பிடத்தையும் தூய்மையாக வைத்துகொள்பவள் . அழகு,அறிவு ,கற்பு, கல்வி ,குணம்  அனைத்திலும் சிறந்த அவளுக்கு சியாமா என்ற பெண் குழந்தை பிறந்தது.
அவளைப்போன்றே சியமாவையும் வளர்த்தாள்.

கசந்த்ரிகாவின்  தூய்மையிலும் பக்தியிலும் கருணை கொண்ட மகாலட்சுமி  ஒரு ஆவணி வெள்ளிகிழமையில் சுமங்கலி ரூபம் கொண்டு கசந்த்ரிகாவின் அரண்மனைக்குள் சென்றாள் . அங்கு நன்றாக சாபிட்டுவிட்டு தாம்பூலத்தை சுவைதுக்கொண்டிருகும் சந்திரிகா சுமங்கலியை பார்த்து என்ன வேண்டும் என கேட்டாள் . அதற்கு மகாலட்சுமி "கசந்திரிகா ,இன்று மகாலட்சுமி அவதரித்த நாள் இன்று விரதமிருந்தால் மகாலட்சுமி வீட்டில் வாசம் செய்வாள்."  என்று கூற, தன்  அந்தபுரத்திற்கு வந்து தன செயலில் குறை கூறும் சுமங்கலியிடம் கோபம் கொண்டாள்  ராணி. அவளை கடும்  சொற்கள் கூறி வீட்டை விட்டு வெளியேற்றினாள்.  மகாலட்சுமி அழுதுகொண்டு வெளியே  வந்ததை  கண்ட இளவரசி சியாமா , அவளிடம் காரணம் கேட்டாள் . அதற்கு மகாலட்சுமி நடந்ததை கூறினாள் . சியாமா "என்னிடம் விரதம் இருக்கும் முறையை கூறுங்கள் நான் அனுஷ்டிக்கிறேன்" என்று கூறினாள் .

மகாலட்சுமி மனம் மகிழ்ந்து சியாமாவிடம் விரத முறையை கூறி சென்றாள் . சியாமா வரலட்சுமி  விரதம் இருந்து வந்தாள். அவளுக்கு திருமணம் ஆனது . இவள் சென்றதும் புகுந்த வீடு செல்வ செழிப்புற்றது. ஆனால் அவள் சென்றதும் பத்ரச்ரவனனின்  நாடு வளம் குன்றி போரில் நாட்டை பறிகொடுத்தான் . கணவனும் மனைவியும்  ஊர் ஊராக சுற்றினார்கள்.
சியமாவிடம் உதவி கேட்டனர்.

சியாமா ஒரு பானை நிறைய பொற்காசுகளை கொடுத்து இதை வைத்து வாழ்க்கை நடத்துமாறு கூறினாள் .  ஆனால், அதை கசந்த்ரிகா திறந்தபோது வெறும் கரிதுண்டுகளே இருந்தன. இதை அறிந்த சியாமாவுக்கு தன்  தாய் ஒருமுறை மகாலட்சுமியை அவமானப்படுத்தியது நினைவிற்கு வந்தது. தன் தாயை அழைத்து நடந்ததை கூறி மகாலட்சுமி சொன்ன விரத முறைகளை கூறினாள் . கசந்த்ரிகா தன தவறை உணர்ந்து விரதம் மேற்கொண்டாள் . அஷ்டலட்சுமியின் அனுகிரகத்தால் இழந்த நாடு திரும்ப பெற்று சுக போகங்களை அனுபவித்து வாழ்ந்தனர்.


இந்த விரதமே வரலட்சுமி விரதமாக கொண்டாடப்படுகிறது. இந்த விரதம் மேற்கொள்வதால், சுமங்கலிப்பெண்கள் கணவன் ஆயுள் கூடும். கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவன் அமைவான் . குழந்தை இல்லாதவர்க்கு சந்தான லட்சுமியின் அருளலால் குழந்தை செல்வம் வந்துசேரும். வீட்டில் அனுஷ்டித்தால் மகாலட்சுமி வீட்டில் வந்து வாசம் செய்வாள்.


ஓம் நம சிவாய !!!